வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பாதிரி கிராமத்தில் இரண்டாவது முறையாக கிராமசபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாதிரி ஊராட்சியை வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன் முன்னிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பாதிரி ஊராட்சியில் மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஆனால், அங்கு வந்த கிராமமக்கள் பாதிரி ஊராட்சியை வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கூட்டத்தை புறக்கணிப்பதாக எதிர்ப்பு தெரிவித்துவிட்டு கிராமமக்கள் புறப்பட்டு சென்றனர்.