வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், பொதுமக்களின் பேராதரவுடன் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2020 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று, அந்த நாள் முதல், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முடிய கடந்த 5 ஆண்டுகளில் பாதிரி கிராமத்திற்கான அனைத்து வகையிலும் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன் என்பதில் உள்ளபடியே நிறைவான மகிழ்ச்சி அளிக்கிறது.
வெளிப்படைத் தன்மை:
எனது பதவி காலத்தில் செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்பாடுகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக, வெளிப்படையான ஊடகத்தை அமைத்தேன். அதன்படி, வாட்ஸ் அப் குழுக்கள், மற்றும் பாதிரி கிராமத்திற்கென தனி இணையதளம் உருவாக்கினேன். அதில், பெரும்பாலான ஊராட்சி மன்ற செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எக்காலத்திற்கும் பொதுமக்கள் அதனை பார்க்கவும், மேற்படி இணையதளம் முழு செயல்பாட்டில் வைத்துள்ளேன்.
சவால்கள்:
கடந்த 5 ஆண்டுகாலம் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் எளிதாக அமைந்துவிடவில்லை. பல சவால்களோடுதான், நலப்பணிகளை செயல்படுத்த முடிந்தது. ஊரின் ஒழுக்கமுறைகளையும், மக்கள் மீதான அக்கறையிலும், எனது தனிப்பட்ட நலனை கருத்தில் கொள்ளாமல், கிராம அத்தியாவசிய தேவைகளை நானே முன்னின்று செயல்படுத்திருக்கிறேன்.
உதவி தேவைப்படும் ஏழை மக்கள் அணுகும்போது, அவர்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்கான உதவிகளை பெற்றுத்தர ஊர் தலைவராக அல்லாமல், மனிதத்தன்மையோடு தனிப்பட்ட முறையில் உதவிகளை செய்து கொடுத்திருக்கிறேன் என்பதில், எனது சேவைப் பணிகளில் திருப்திகரமானவையாக கருதுகிறேன்.
கிராமத்தில் ஊர்த் திருவிழாவாகட்டும், பொதுப்பிரச்னை, தனிநபர் மோதல் ஆகட்டும், சுமூகத் தீர்வுக்காக முயன்று தீர்வு கண்டது, எனது சமூகப்பணிகளில் முத்தாய்ப்பாக அமைந்தது.
கொரோனா காலத்தில் அரும்பணி:
நான் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு உலகமே ஸ்தம்பித்த நிலையில், கிராம மக்கள் எந்தவிதத்திலும் பாதிப்படையக்கூடாது என்பதற்காக முன்களப் பணியாளனாக சுகாதார பணிகள் மேற்கொண்டது, சிகிச்சைகளுக்கு உதவியது, வருவாய் இழந்து தவித்தவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவு பொருட்கள் பெற்றுத் தந்தது, ஏழை மக்களுக்கு மழை காலங்களில் தார்பாய், உணவு வழங்கப்பட்டது என ஏராளமான நற்பணிகளை தனிநபராக செய்தேன்.
சிறுவனுக்கு சிகிச்சை:
எனது முயற்சியால், இருளர் குடியிருப்பு பகுதியில், காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது - மேலும் அந்த பகுதியில் மருத்துவ உதவிகள் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சகமனிதனாக உயிருக்கு போராடிய ஒருவருக்கு வாழ்க்கையளித்த திருப்தி என் வாழ்நாளில் கிடைத்த பெரும்பாக்கியமாக கருதுகிறேன். இதற்காக அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் ஒத்துழைத்து உதவியதையும் உளமாற நன்றிகூர்கிறேன்.
சுடுகாடு பாதை:
ஊராட்சி மன்றத்தின் நிதி நெருக்கடி காரணமாக தொய்வாக நிகழ்ந்த பல்வேறு பணிகளை, அரசு அதிகாரிகளிடம் முறையாக பேசி, பல்வேறு நலப்பணிகளை கிராமத்தில் விரைந்து செயல்படுத்தினேன். குறிப்பாக, சாலை, குடிநீர், தெரு மின் விளக்கு, சுடுகாடு பாதை, வீடு வழங்குதல், இலவச பட்டா, ஆடு என அத்தியாவசிய நலத்திட்டங்களை முறையே தகுதியான பயனாளிகளை கண்டறிந்து, லஞ்சம்/முறைகேடு இன்றி வழங்கியது எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தியளித்தது.
குறிப்பாக, பாதிரி கிராமத்தில் முறையான சுடுகாடு பாதை இல்லை என்பதால், தனியார் நிலங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்றைய சூழலில் குடியிருப்புகள் பெருகியதாலும், தனியார் நிலங்கள் விற்கப்பட்டதாலும் சில இடங்களில் சவத்தை எடுத்துச்செல்ல சிக்கல் ஏற்பட்டது. சமயங்களில் பிரச்னைகளும் எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கான தீர்வாக முறையாக ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு செய்யப்பட்டது. இதில் நாமே தீர்வை நோக்கி சென்றால் விரைந்து தீர்வு காணப்படும் என்பதை மனதிற்கொண்டு நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி , சுடுகாடு பகுதிக்கு செல்ல பாதை அமைக்க இடம் பெறப்பட்டது. எனது தீவிரமுயற்சியில் விரைந்து அரசு அதிகாரிகளும் ஆவனசெய்து பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த திட்ட செயற்பாடு எனது ஆட்சியில் நிறைவேற்றியிருப்பது உள்ளபடியே மனநிறைவு அளிக்கிறது.
பசுமை பாதிரி:
எனது இந்த 5 ஆண்டுகால ஆட்சியில், பாதிரி கிராமத்தில் உள்ள சாலைகளின் ஓரங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு, பசுமை பாதிரி என்கிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமாக நிகழ்த்தியிருக்கிறேன். ஒருநாள் சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், வாய்ப்புள்ளபோதெல்லாம் மரக்கன்றுகளை பெற்று, கிராம எல்லைக்குள் பல இடங்களில் நட்டு பேணிகாக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
உள்ளம் நெகிழ நன்றி:
எனது இந்த 5 ஆண்டுகால ஆட்சியில், என்னோடு கிராம வளர்ச்சிக்கு ஒத்துழைத்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், துணைத்தலைவர், ஊராட்சி செயலர், தூய்மை பணியாளர்கள், குடிநீர் மோட்டார் ஆபரேட்டர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கிராம நிருவாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் உட்பட அனைத்து வருவாய், பொதுப்பணி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், காவல் துறையினர், மருத்துவ துறையினர், வேளாண்மை துறையினர், மின்சார துறையினர், கல்வித் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இந்த நேரத்தில் எனது உள்ளம்நெகிழ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்த்தவர்களை அரவணைத்த தருணங்கள்:
ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில், சிலர் என்னை எதிர்த்து போட்டியிட்டிருந்தாலும், கிராம தேவைகளுக்காக என்னை அணுகியபோது எந்த பாகுபாடும் காட்டாமல் அவர்களின் கோரிக்கைகளையும் முழுதாக ஏற்று நிறைவேற்றியிருக்கிறேன் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
குறிப்பாக, ஊரில் திருவிழா நடத்தி வந்த குழுவினர், கோவில் திருவிழாக்கள் நடத்தியதில் ஏற்பட்ட கடன்சுமையால் தவித்தபோது, நான் ஆட்சி பொறுப்பேற்றிருந்தேன். சில சூழலில் எனக்கு இடையூறாக செயற்பட்டிருந்தாலும், "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்கிற வள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப நல்லெண்ண அடிப்படையிலும், ஊரின் ஒற்றுமை சூழலை பேணி காக்கவும் எண்ணி, அக்கடன்களை அடைக்க நிதி ஆதாரத்தை உருவாக்கி கொடுத்தேன். பின்னர் அவர்களை இணைத்து விழாக்களை ஒருங்கிணைத்தேன்.
அந்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
போராட்டக் களத்தில் தோள் கொடுத்தவர்கள்:
போதை எனும் அரக்கன் பிடியில் வாழ்க்கையைத் தொலைக்க கூடாது என்பதற்காக டாஸ்மாக் மதுக் கடையை அகற்றுவதற்காக, நான் தலைவராக வருவதற்கு முன்பிருந்து, எனது ஆட்சியின் கடைசி நாள்வரை போராட்டக்களத்தில் ஒன்றாக இருந்தது.. வந்தவாசி நகராட்சியுடன் பாதிரி கிராமத்தை இணைக்க போவதாக தகவல் வந்ததும், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, வரிச்சுமை வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு போராட்டங்களுக்கு ஒன்றாக செயல்பட்டது என.. என்னோடு தோள்கொடுத்த அனைத்து தரப்பு மக்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிரி வளர்ச்சிக் குழு:
பாதிரி வளர்ச்சிக்குழுவாக இளைஞர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்ட காலத்தில் இருந்து, என் மீது அக்கறைகொண்ட தோழர்கள், கிராம முன்னேற்றத்திற்கான அரும்பணிகளை செவ்வனே செய்ய அதிகாரத்துக்கு வர ஒத்துழைத்தனர். பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். அதுமட்டுமல்லாது வெளியில் இருந்து ஆதரவளித்து, மக்கள் பணியில் என்னோடு தோள் கொடுத்த எனது அன்பின் தோழர்களுக்கு இந்த தருணத்தில் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவணங்குகிறேன்:
இறுதியாக, கிராம ஊராட்சி தலைவராக நான் வரவேண்டும், நலப்பணிகளை கடைக்கோடி மக்களையும் சென்ற சேர வேண்டும் என என் மீது நம்பிக்கை வைத்து, என்னை தேர்ந்தெடுத்த எனது உறவுகளான பாதிரி கிராம மக்கள், என் வாழ்நாளில் மறக்கமுடியாதவர்கள். உங்களுக்கு உளமாற நன்றி தெரிவிப்பதோடு, உங்கள் அன்புக்கு என்றென்றும் தலைவணங்குகிறேன்.
என்றும் மக்கள் பணியில்,
வெ.அரிகிருஷ்ணன்.பி.எஸ்சி.,
5 ஆண்டுகளில், ஊராட்சி மன்றம் மூலம் பாதிரி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள்...
1 மற்றும் 4-வது வார்டுகள்:
> https://pathiri.vandavasinews.in/2025/01/5-1-4.html
2,3,5 மற்றும் 6-வது வார்டுகள்:
> https://pathiri.vandavasinews.in/2025/01/5-235-6.html